ன்பார்ந்த "பாலஜோதிடம்' வாசகர் களுக்கு... 

இப்போது நாம் பார்த்துக்கொண்டிப்பது எமதர்மராஜன்- நசிகேதன் இவர்களின் சம்பாஷனையில் உன்னதமான மேன்மை யான ஆன்மிக ஆன்மாவைப் பற்றிய உரையாடல்களை வாசிக்கிறோம்.

Advertisment

இந்த உரையாடலை இப்போது நிறுத்திக் கொண்டு மேலும் தொடர்வதற்கு முன்.

ஒரு யோகி ஒரு போகி 

இவர்களுடைய சூட்சும சரீரம் மரணத் திற்கு பின்னால் எவ்வாறு பயணம் செய்கிறது என்று பார்த்துவிட்டு அதன்பின்னர் நசிகேதன் - எமதர்மன் உரையாடலை தொடர்வோம்...

Advertisment

இதில் நசிகேதனுடைய ஸ்தூல சரீரம் இல்லாமல் சூட்சும சரீரம் மட்டுமே எம லோகத்தில் வாசம் செய்கிறது.

நசிகேதன் ஒரு அந்தணன் அவனைப் பார்த்து அவரது தந்தை கோபத்தில் கூறிய வார்த்தைகள் உன்னை நான் எமனுக்கு தானம் செய்கிறேன் என்று. 

Advertisment

ஆகவே, அவர் ஆயுள் முடிந்து இங்கு வரவில்லை. ஒரு தானம் செய்த ஆத்மா வாக எமலோகம் செல்கிறார்.

இதனால் அவருக்கு தர்மத்தின்ரீதியாக எமதர்ம ராஜன் மரியாதையுடன் நடத்துகிறார்!

சூட்சுமத்திலிருந்து நமது ஸ்தூல சரீரம் எவ்வாறு உருவாகிறது...?

ஜீவராசிகளை உருவாக்கும் பஞ்ச பூதங்களான ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம். அதன் பிரதிபலன்களானஓசை, ஸ்பரிசம், வடிவம், சுவை, வாசனை. மேற்காணும் அனைத்தும் பரமாத்மாவின் திருவருளால் பஞ்சபூத கிரகங்கள் ஆள்கின்றன.

அவைகளானது-

குரு - ஆகாயக்கிரகம்

சனி - காற்றுக்கிரகம்

செவ்வாய் - நெருப்புக்கிரகம்

சுக்கிரன் - நீர்க்கிரகம்

புதன் - பூமிக்கிரகம் பிரதிபலன்களை ஆள்வது

குரு - ஓசை.

சனி - ஸ்பரிசம்.

சூரியன். செவ்வாய் - வடிவம்.

சந்திரன். சுக்கிரன் - சுவை.

புதன் - வாசனை.

மேலும் சூரியன் - ஜீவனுக்கு உயிர் - ஆத்மா.

சந்திரன் - உடல் - மனம்

சப்தம கிரகங்களின் ஒளிகளாலேயே சுற்றிவரும் இந்த பூமியும் அதில் அமைந்துள்ள ஜீவராசிகளும் வாழ்கின்றன.

2.  பரமாத்மா முதலில் மஹத்- தத்வம் தோற்றுவித்தார். 

இது ஜட உலக படைப்பின் அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டதாகும். பிறகு காலம் தோன்றியது. மேலும் காலப்போக்கில் முக்குணங்கள் தோன்றின.

இயற்கை என்பது முக்குணங்களின் தோற்றங்களாகும். அவை செயல்களாக உருமாறுகின்றன.

ஜடப் படைப்பினை ஆதாரமாகக் கொண்ட மஹத் தத்வம் பரமாத்மாவின் விருப்பத்தால் சலனமடைவதால் ஜடச் செயல்கள் உண்டாகின்றன.

முதலாவதாக சத்வ மற்றும் ரஜோ குணங்களின் உருமாற்றம் உண்டாகின்றன.

பிறகு தமோ (அறியாமை) குணத்தின் காரணத்தால் ஜடம் அதன் அறிவு மற்றும் அறிவின் பல்வேறு செயல்கள் ஆகியவை நிகழத் துவங்குகின்றன.

இவ்வாறாக சுயநலம் கருதும் பௌதிக அகங்காரம் மூன்று அம்சங்களில் உருமாற்றம் செய்யப்பட்டு சத்வம், ரஜஸ், தமஸ், எனும் முப்பிரிவுகளாக அறியப்படுகிறது.

இந்த பிரிவுகளே ஜடத்தை விருத்தியாக்கும் சக்திகள். ஜட படைப்பை பற்றிய அறிவு. மற்றும் அத்தகைய பௌதிக சக்திகளை வழிநடத்தும் புத்தி ஆகியவையாகும்.

ஐந்து மூலப் பொருட்களில் முதலாவதாக ஆகாயம். பொய் அகங்காரத்தின் இருளிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. பிறகு பஞ்சபூதங்களும் அதன் பிரதிபலன்களும் படைக்கப்பட்டன.

சத்வ குணம்

சத்வ குணத்திலிருந்து மனம் உற்பத்தி செய்யப்பட்டு தோற்றமளிக்கிறது. 

அவ்வாறே உடல் அசைவுகளை கட்டுப்படுத்துபவர்களான பத்து தேவர்களும் தோன்றுகின்றனர். 

அத்தகைய தேவர்கள்: திக்குகளை ஆள்பவர். காற்றை ஆள்பவர்.

சூரிய தேவன், தக்ஷ

பிரஜாபதியின் தந்தை, அஸ்வினி குமாரர்கள், அக்னி தேவன், சுவர்க்க ராஜன், சுவர்க்கத்தின் வழிபாட்டுக்குரிய மூர்த்தி, ஆதித்தியர்களின் தலைவர் மற்றும் பிரஜாபதி பிரம்மா ஆகியோராவர்.

ரஜோ குணம்

ரஜோ குணத்தின் தொடர்ந்த உருமாற்றத் தால் செவி, தோல், மூக்கு, கண்கள், வாய், கைகள் புற பாலுறுப்புகள், கால்கள் மற்றும் மலத்துவாரம் போன்ற புலனுறுப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 

இவற்றோடு புத்தியும், உயிர்ச்சக்தியும், உற்பத்தியாகின்றன.

இந்த ரஜோ குணமானது. மூலப் பொருளான காற்றிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டதாகும். 

மூலப் பொருட்கள், புலன்கள், மனம் மற்றும் இயற்கை குணங்கள் ஆகிய இவற்றை பொருந்தும்படி இணைக்காத வரை உடல் எனப்படும் வடிவங்களை உருவாக்க முடியாது

குணங்களை ஆளும் கிரகங்கள்

சூரியன், சந்திரன், குரு, சத்வகுணத்தை ஆள்பவர்கள்.

புதன், சுக்கிரன், ரஜோ குணத்தை ஆள்பவர்கள்.

செவ்வாய், சனி, தமோ குணத்தை ஆள்பவர்கள்.

இவ்வாறாக பரமாத்மாவின் திருவருளால் சப்தம கிரகங்களின் சக்திகளின் ஒளியின் வலிமையால் இவையனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டபொழுது சிருஷ்டி, உபசிருஷ்டி ஆகியவற்றின் மூலமாக இப்பிரஞ்சம் தோன்றியது என்பதில் சந்தேகமில்லை. 

கண்களுக்கு தெரியாத பரமாத்மா ஒளியின் வடிவிலேயே உலகை ஆள்கிறார். அறியாமை இருளிலிருந்து வெளியேறி ஒளியுடைய பாதையில் முன்னேறிச் செல்லுமாறு வேதங்கள் நம்மை உபதேசிக்கின்றன.

(தமஸிமா ஜ்யோதிர் கம)

எனவே, பரமாத்மாவின் புலன்களை திருப்திபடுத்துவதே ஒளியுடைய பாதை யாகும். அந்த மூல பிரம்ம ஜோதியை அடையும் வழி சூரிய மண்டலமே ஆகும்.

ஆன்மாவை அறிவதே ஆன்மிகம். 

அனைத்து ஆன்மாவும் ஒன்றே அந்த ஒன்றே பரமாத்மா ஆவார். 

ஜோதி என்றால் ஒளிஷம் என்றால் அறிவு ஜோதிஷம் என்பது ஒளியின் அறிவுப் பாதையாகும். 

ஒளியின் அறிவு இயக்கத்திலேயே நம் வாழ்வு செல்கிறது.

ஆகவே, ஆன்மிகத்திலிருந்து பிறந்ததுவே ஜோதிஷம்.

ஒரு சாதாரணபோகி (குடும்பஸ்தன்) தன் உயிரை விடுவதிலும் ஒரு மகாயோகி (ஞானி) ஜீவசமாதி நிலையில் தன் உயிரை வெளியேற்றுவதிலும் உள்ள வேறுபாடு என்ன..?

ஒரு சாதாரண மனிதனின் உயிரானது இரு கண்கள், இரு நாசித்துவாரங்கள், இரு காதுகள் மற்றும் வாய் ஆகிய ஏழு துவாரங்கள் வழியாக உயிர் மூச்சு வெளியேறுகிறது. 

பொதுவாக சாதாரண மனிதன் ஒருவன் இறக்கும்பொழுது அவனது வாய் வழியாக அது வெளியேறுகிறது. ஆனால், மேலே குறிப்பிட்டுள்ளதைப்போல், தனது சொந்த வழியில் உயிர் மூச்சை கட்டுப்படுத்தும் கி தலையிலுள்ள மூளைத் துவாரத்தின் வழியாக உயிர் மூச்சை விடுவிக்கிறார்.

ஆகவே, யோகி மேற்குறிப்பிட்ட ஏழு துவாரங்களையும் அடைத்துவிடுகிறார். இதனால் உயிர் மூச்சு இயற்கையாகவே மூளைத் துவாரத்தின் வழியாக வெடித்து வெளியேறுகிறது. 

இதனை யோகி தனது கடுமையான முயற்சியாலும் பயிற்சியாலும் அடைகிறார்.

அதாவது- ஒரு யோகி இந்த மானிடர் களின் கிரகத்தைவிட்டு வெளியேற விரும்பு கிறாரோ, அச்சமயம் சரியான நேரம் அல்லது இடத்தைப் பற்றி அவர் குழப்பமடையாமல் சுகாசனத்தில் அமர்ந்து உயிர் காற்றை கட்டுப்படுத்தி புலன்களை மனதால் அடக்குகிறார்.

அதற்குப்பின் யோகி தனது தூய புத்தியை உபயோகித்து, தன் மனதை ஜீவனோடு இரண்டறக் கலக்கச் செய்கிறார்.

பிறகு ஜீவனை பரமாத்மாவுடன், ஐக்கியப் படுத்திவிடுகிறார். இதைச் செய்வதால் பூரண திருப்தியடைந்து யோகி, மற்றெல்லாச் செயல்களையும் நிறுத்திவிடுகிறார்.

"லப்தோபசாந்தி' எனும் இவ்வுன்னத நிலையில், இகலோக ஜீவன்களை ஆளக்கூடிய சக்தியளிக்கப்பட்டுள்ள சுவர்க்கலோக தேவர்களையும் கட்டுப்படுத்துவதான அழிவை உண்டாக்கும் காலம் செல்லாததாகிவிடுகிறது.

அந்த நிலையில் பௌதிக சத்வ, ரஜோ, தமோ குணங்களோ, பொய் அகங்காரமோ, பௌதிக காரணக்கடலோ, பௌதிக இயற்கையோ இல்லை. பரமாத்மாவுடன் அனைத்தும் சம்பந்தப்பட்டுள்ள அந்த மிகவும் நல்ல நிலையை ஆன்மிக யோகி அறிந்திருப்பதால் எல்லா பௌதிக ஆசைகளையும் அவரால் அனைத்துவிடமுடியும். அதன்பின் காற்றுத் துவாரத்தை (மலம் கழிக்கப்படும் துவாரம்) குதிகாலால் அடைத்து உயிர்க்காற்றை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு உயர்த்துவதன்மூலமாக ஆறு முக்கிய இடங்களுக்கு தை உயர்த்திய பின் ஜட உடலை அவர் விடுவிக்கிறார். 

குறிப்பிட்ட யோக முறையால் உயிர் மூச்சை அடக்குவதை பூரணமாகப் பயின்று மற்ற திறமைபெற்ற யோகி பின்வருமாறு உடலை விடவேண்டுமென்று அறிவுறுத்தப்படுகிறார். 

மலத்துவாரத்தை தன் குதிகாலால் அடைத்து பின் உயிர் மூச்சை ஆறு இடங்களுக்கு அவர் முன்னேற்றிச் செல்லவேண்டும். 

நாபி, வயிற்றுப்பகுதி, இதயம், மார்பு, மேல்வாய், புருவங்கள், மற்றும் மூளைக்குழி, சமாதியிலிருக்கும் யோகி உயிர் மூச்சை நாபியிலிருந்து மேலேயுள்ள இதயத்திற்கு மெதுவாக தள்ளி, அங்கிருந்து மார்புக்கும், பிறகு மேல்வாயின் மூலஸ்தானத்திற்க்கும் தள்ளவேண்டும். புத்தியால் சரியான இடங்களை யோகி கண்டறிய வேண்டும். உயிர் மூச்சின் சுழற்சியில் ஆறு சக்கரங்கள் உள்ளன.மேலே குறிப்பிட்டிருப்பது.

ஸ்வாதிஷ்டான- சக்கரம் அல்லது உயிர் மூச்சின் உற்பத்தி ஸ்தானம் எனப்படும்.

இதற்கு மேலேயும் வயிற்றுப்பகுதி மற்றும் நாபி ஆகியவற்றுக்குச் சிறிது கீழே இருப்பது மணி- பூரக-சக்கரமாகும்.

மேலே உள்ள பிரதேசத்தை தொடர்ந்து தேடும்பொழுது இதயத்திலுள்ள அனாஹத- சக்கரத்தை யோகி அடைகிறார்.

பிறகு அதற்கும் மேலே மேல் வாயின் மூல ஸ்தானத்தில் உயிர் மூச்சை நிறுத்தும்பொழுது விருத்தி சக்கரத்தை யோகி அடைகிறார். 

இறுதியாக யோகி, உயிர் மூச்சை புருவங்களுக்கு மத்தியில் மேலே தள்ளவேண்டும். பிறகு உயிர் மூச்சு வெளியேறும் ஏழு துவாரங்களை அடைத்தபின் பரபிரம்மத்தை சென்றடையும் யோகியின் குறிக்கோளில் அவர் உறுதியாக இருக்கவேண்டும்.

ஜட இன்பத்திற்குரிய எல்லா ஆசைகளிலிருந்தும் யோகி முற்றிலும் விடுபட்டவராக இருந்தால், மூளைத் துவாரத்தை அடையும் யோகி பிறகு பகவானை அடைந்து தன் பௌதிக தொடர்புகளையெல்லாம் விட்டு பிறவி இல்லா பெரும் நிலையை அடைகிறார். 

அப்போதுதான் உண்மையாகவே ஒரு ஆன்மாவானது சாந்தி அடையமுடியும்..! 

இங்கு உயிரை பறிக்கும் எமதர்மராஜனுக்கு வேலையில்லை. ஆனால் சாதாரண மனிதனின் இறப்பு உயிரானது எமதர்மராஜனுடைய  கைகளால் பறிக்கப்பட்டு பிறவிப் பெருங்கடலிலேயே சுழலும்.

-தொடர்ந்து பார்ப்போம்!

செல்: 96599 69723